Friday, September 16, 2011

HIDDEN TRUTH - சிவவாக்கியர்சிந்தனை செய் மனமே !
-----------------------------------

காலைமாலை நீரிலே முழுகு மந்தமூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும் 

காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்றிலொன்றையும்

மூலமே நினைந்திராகில் முத்தி சித்தியாகுமே !

-------------------------------------------------------------------------------
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ !

-------------------------------------------------------------------------------
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 

வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் 

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் 

ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 

எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்

ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே !

-------------------------------------------------------------------------------
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 

ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே !

-------------------------------------------------------------------------------
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே !

-------------------------------------------------------------------------------
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ 

வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 

வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் 

புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே 

புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய் 

புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே !

-------------------------------------------------------------------------------
மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும் 

மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும் !

-------------------------------------------------------------------------------
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ 

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ 

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே !

-------------------------------------------------------------------------------
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா 

இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ 

பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ 

பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே !

-------------------------------------------------------------------------------
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 

வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 

மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 

சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே !

-------------------------------------------------------------------------------
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் 

சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் 

காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் 

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே !

-------------------------------------------------------------------------------
கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா 

வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா 

ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் 

காயமான பள்ளியில் காணலாம் இறையையே !

-------------------------------------------------------------------------------
வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை 

தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே? 

பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள் 

சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் 

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே 

காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே 

ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே !

-------------------------------------------------------------------------------
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் 

செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் 

உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் 

அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே !

-------------------------------------------------------------------------------
பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே !

-------------------------------------------------------------------------------
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் 

வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் 

நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் 

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே !

-------------------------------------------------------------------------------

- சிவவாக்கியர்

No comments:

Post a Comment